Title of the document


ஒரே பணிக்கு ஒரே ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள உண்ணாநிலைப் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியிருக்கிறது. ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், ஆணவமும் கண்டிக்கத்தக்கவை.
தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும்  இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இது தான் இயற்கை நீதியாகும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது. 2009 மே 31-ஆம் தேதி வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்துடன் ரூ.2,800 தர ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதன்பிறகு, அதாவது 2009 ஜூன் ஒன்றாம் தேதி முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்ற அளவில் மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், 2009 மே மாதத்தில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அனைத்து படிகளுடன் சேர்த்து  ரூ.42,000 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதன்பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு  ஒட்டுமொத்தமாக ரூ.26,500 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாள் இடைவெளிக்காக  மாத ஊதியத்தில் ரூ.15,500 குறைத்து வழங்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.
இந்த அநீதியைக் களைய வலியுறுத்தியும், இடைநிலை ஆசிரியர்கள் அனைவருக்கும் ஒரே ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தான் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடந்த திங்கட்கிழமை  முதல் சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் உண்ணாநிலை மேற்கொண்டனர். ஆனால், அங்கு போராட்டம் நடத்த அனுமதிக்காக காவல்துறையினர், அனைத்து ஆசிரியர்களையும் கைது செய்து சென்னை எழும்பூர் இராஜரத்தினம் திடலில் அடைத்தனர். நள்ளிரவில் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். ஆனால், அங்கிருந்து வெளியேற மறுத்து விட்ட ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உண்ணாநிலை மேற்கொள்ளப் போவதாக வலியுறுத்தி போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். போராட்டத்தைக் கலைக்க அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்காத நிலையில், நேற்றிரவு முதல் அனைத்து ஆசிரியர்களும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை அரசும், காவல்துறையும் நடத்தும் விதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். இராஜரத்தினம் திடலில் இருந்து ஆசிரியர்களை விரட்டுவதற்காக அவர்களை மிரட்டியது ஒருபுறமிருக்க குடிநீர் கிடைக்கவிடாமல் தடுத்தும், கழிப்பறைகளை மூடியும் காவல்துறையினர் செய்த அட்டகாசங்களை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. உண்ணாநிலை  இருந்து வரும் ஆசிரியர்களில் 25 பேர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இரக்கமில்லாத அரசு இன்னும் அவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவிக்கொண்டிருக்கிறது.
ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமாக உள்ள நிலையில், அவற்றை நிறைவேற்றுவது தான் அரசின் பணியாகும். ஆனால், ஆசிரியர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை. ஆசிரியர்களுடன் இரு முறை பெயரளவில் பேச்சு நடத்திய தமிழக அரசு, அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டது. பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் இன்னும் ஒருபடி மேலே போய், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளைக் களைவது  குறித்து பரிந்துரைக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழுவிடம் தங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதை விடுத்து போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது; இனி அவர்களுடன் பேச்சு நடத்த முடியாது என்றும் கூறியிருக்கிறார். இது அதிகார மமதையின் உச்சம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.
ஆசிரியர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கை சிக்கலானதாக இருந்தால், அதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யலாம். ஆனால், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் மிகப்பெரிய அளவில் துரோகம் இழைக்கப்பட்டிருப்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது. ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் வரை அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட்டதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன. அதனடிப்படையில் அவர்களின் கோரிக்கைகளை ஏற்பது தான் நியாயமாகும். அதைவிடுத்து ஒரு நபர் குழுவை அணுகும்படி கூறுவது பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாகும்.
கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களின் தேவைகள் கேட்கப்படாமலேயே நிறைவேற்றப்பட வேண்டும். மாறாக அவர்கள் கேட்டும் நிறைவேற்றாமல், ஆசிரியர்களை போராட்டம் நடத்தும் சூழலுக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பது அரசுக்கு அவமானம் ஆகும். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அதன்மூலம் இவ்விஷயத்தில் ஏற்பட்டுள்ள அவப்பெயரை அரசு போக்கிக் கொள்ள வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post