Title of the document

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு, பிறமொழி கலப்பின்றி, எளிய முறையில் கற்பித்தல் தொடர்பான, பயிற்சிகள் விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 645 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டு, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஒரு வகுப்புக்கு, குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது இருந்தால் மட்டுமே, அடுத்தடுத்த கல்வியாண்டுகளில், புதிய மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இதன் காரணமாக, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும், ஆங்கில வழி வகுப்புகளில் சேர்க்கப்படுவதாக, கூறப்படுகிறது.

மேலும், ஆங்கில வழி வகுப்புகள் கையாள, பிரத்யேகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எளிய மொழி நடையில், பாடம் நடத்துவதற்கான, கற்பித்தல் பயிற்சிகளும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் மொழியிலே, பாடத்திட்ட கருத்துகள் விளக்கப்படுவதாக கூறப்படுகிறது. 'ஆல்பாஸ்' நடைமுறை இருப்பதால், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, தேர்ச்சி பெறுவதில், சிக்கல் இல்லை.

இதன் காரணமாக, மேல்நிலை வகுப்புகளில், ஆங்கில மொழி புலமையின்றி, அரசுப்பள்ளி மாணவர்கள், பின் தங்கும் நிலை தொடர்கிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காண, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி சார்பில், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி முதல்வர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், ஆங்கில வழி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பாடத்திட்ட கருத்துகளை, எளிமையாக சொல்லிக் கொடுப்பது தொடர்பாக, கற்பித்தல் பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி பேராசிரியர்களை கொண்டு, கற்பித்தல் செயலாக்க திட்டம் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. இதில், உச்சரிப்பு, மொழி நடை, மாணவர்களுக்கு எளிய முறையில் புரிய வைத்தல், கற்பித்தல் கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்படும். இது சார்ந்து, தொடக்க கல்வித்துறை ஒப்புதலுடன், இம்மாத இறுதிக்குள், பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post