Title of the document

ராமமோகன் ராவ் தலைமை செயலர் பதவியில் இருந்து நீக்கப்படக் கூடும் என தெரிகிறது. இதனால் மத்திய அரசின் ஆலோசகரும் தமிழக சீனியர் ஐஏஎஸ் அதிகாரியுமான சக்திகாந்த தாஸ் புதிய தலைமை செயலராக நியமிக்கப்படக் கூடும்.

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை செயலராக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகரும் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளில் சீனியர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவருமான சக்திகாந்ததாஸை நியமிக்க வாய்ப்புள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசின் தலைமைச் செயலராக உள்ள ராமமோகன் ராவ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்திலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ராமமோகன் ராவ் நீக்கம்?

இதனையடுத்து ராமமோகன் ராவை உடனே தலைமைச் செயலர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது. முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் ராமமோகன் ராவை நீக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

சக்திகாந்த தாஸ்

இந்த நிலையில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகராக உள்ள சக்திகாந்த தாஸ் நியமிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக பேட்ச் ஐஏஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் காஞ்சிபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தவர்; எல்காட் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய துறைகளில் பணியாற்றியவர்.

ஏன் இந்த முடிவு?

அத்துடன் தற்போதைய தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே மிகவும் சீனியர் சக்தி காந்த தாஸ். ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு; கருப்பு பண மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மத்திய பாஜக அரசின் நம்பிக்கைக்குரிய அதிகாரி.

ஆகையால் சக்திகாந்ததாஸை முறைப்படியே தமிழக அரசின் தலைமைச் செயலராக்குவதன் மூலம் தமிழக ஆட்சி அதிகாரத்தை தமது பிடியில் முழுமையாக வைத்துக் கொள்ள முடியும் என்பது மத்திய பாஜக அரசின் விருப்பம் என்கிறது டெல்லி வட்டாரங்கள். ராமமோகன் ராவை பல சீனியர்களை ஓரம்கட்டிதான் ஜெயலலிதா தலைமைச் செயலராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post