Title of the document


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான, அரசு உத்தரவை வெளியிடாவிட்டால், ஜனவரியில் நடைபெறும் மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்,'' என அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி தெரிவித்தார்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் சங்கம் சார்பில் திருமங்கலத்தில் நடந்த ஓய்வூதியர் தின விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 2003ம் ஆண்டிற்கு பின்னர், அரசு ஊழியர் சங்க அமைப்புகளின் சார்பில் வலுவான போராட்டம் நடத்தப்படவில்லை. அரசு ஊழியர்களையும், பெண் ஊழியர்களையும், தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களையும் ஒன்று திரட்டுவதில் பிரச்னையும், பலகீனமும் உள்ளது. அரசு நிர்வாக பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள், அரசு ஊழியர்களின் உண்மை நிலை மற்றும் கோரிக்கை குறித்து முறையாக ஆட்சியாளர்களிடம் கொண்டு செல்வதில்லை. அவர்கள் ஆட்சியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இடைவெளி ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையை மாற்ற நாம் முன்பு போல் ஒன்று திரள வேண்டும். நமக்குள் கூட்டு சக்தியை உருவாக்க வேண்டும். பெண் ஊழியர்கள் உட்பட அத்தனை அரசு ஊழியர்களும் சென்னையில் ஒன்று திரண்டால், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வந்து விடலாம். 3.5 லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் ஒன்று திரண்டால் தொகுப்பூதிய முறையை மாற்றி விடலாம். புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது, 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகளில் 20 சதவீதம் உடனடியாக இடைக்கால நிவாரணம் வழங்குவது, தொகுப்பூதிய திட்டத்தை ஒழிப்பது, மீண்டும் நிர்வாக தீர்ப்பாய சிறப்பு குழு அமைப்பது தொடர்பாக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

இவை நிறைவேறாவிட்டால், திருவண்ணாமலையில் ஜனவரி 6, 7, 8, தேதிகளில் நடக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மாநாட்டில், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post