Title of the document

தமிழக அரசு பணியில் உள்ள பதவி உயர்வு பெற்றுள்ள உதவியாளர்களுக்கு பவானிசாகர் அடிப்படை பயிற்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:–

அரசுக்கு பரிந்துரை

2003–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் 2007–ம் ஆண்டு பணியில் சேர்ந்த தட்டச்சர்கள் ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக தேர்வு செய்யப்பட்டு, 53 வயதை கடந்த நிலையில் உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.

அவர்கள் இதுவரை பணியாற்றிய அனுபவமே போதுமானது என்பதாலும், பயிற்சி முடித்துவிட்டு குறைந்தது 5 ஆண்டுகள் கூட பணியாற்ற முடியாமல் போவதால் அரசுக்கு பண விரயம் உண்டாகும் எனவும், 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர் பதவியில் இருந்து உதவியாளராக பதவி உயர்வு பெற்றவர்கள் பவானிசாகரில் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைவிடப்பட்டிருந்தது. இவர்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்று பயிற்சி துறைத்தலைவர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

விலக்கு அளிக்கபடுகிறது ;

தமிழ்நாடு அரசு தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் சங்கத்தின் கோரிக்கை மற்றும் பயிற்சி துறைத்தலைவரின் பரிந்துரை ஆகியவற்றை அரசு கவனமாக பரிசீலித்தது. இந்த பரிந்துரையை ஏற்கலாம் என்று முடிவெடுத்து உள்ளது.

அதன்படி 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வு பெறும்போதும் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தால் நடத்தப்பெறும் அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.  இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு என்.ஜி.ஓ. சங்க தலைவர் சண்முகராஜா நன்றி தெரிவித்து உள்ளார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post