Title of the document


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும்: சுப்ரீம் கோர்ட் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பிறப்பித்த 2 
அரசாணைகள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது


 டெல்லி: ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பினை அடுத்து இனி தமிழகத்தில் ஆசிரியர் நியமன தகுதித்தேர்வு நடத்துவதில் தடை இருக்காது என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71-ல் வெயிட்டேஜ் முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கடந்த 2013ம் ஆண்டிற்குப் பின்னர் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனால் ஆசிரியர் பயிற்சி படித்தவர்களும், பிஎட், எம்.எட் படித்தவர்களும் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், அதன் கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, உச்சநீதிமன்றம் தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த அக்டோபர் 25ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், உச்சநீதிமன்ற வக்கீல் சிவபால முருகன், தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள். தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், வெயிட்டேஜ் முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் வெயிட்டேஜ் அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு வெயிட்டேஜ் முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில், தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்?

அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது? தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித வெயிட்டேஜ் பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

 இதனிடையே இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த 2 அரசாணைகள் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post