Title of the document

மத்திய நிலத்தடி நீர் வாரியம், மத்திய நீர் வள, நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாநில ஓவியப் போட்டியை புதுச்சேரி, லாஸ்பேட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடத்தியது.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவிலான ஓவியப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டில், நீரை சேமிப்போம், உயிரை காப்போம் என்ற தலைப்பில் பள்ளி அளவிலான ஓவியப்போட்டி நாடு முழுவதும் கடந்த அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக பள்ளி கல்வித் துறையின் மாநில பயிற்சி மைய ஒத்துழைப்புடன் நான்கு மண்டலங்களில் உள்ள 141 பள்ளிகள் ஓவியப்போட்டியை நடத்தின.

இதில் 10,115 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதிலிருந்து 50 சிறந்த ஓவியங்கள் மாநில அளவிலான ஓவியப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து, லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் மாநில அளவிலான ஓவியப்போட்டி நடந்தது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் சென்னை தலைமை அதிகாரி சுப்புராஜ் போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் 50 மாணவர்கள் பங்கேற்று நீரை சேமிப்போம், பூமியை காப்பாற்றுவோம் என்ற தலைப்பில் ஓவியம் வரைந்தனர்.
பின்னர் 150 மரக்கன்றுகளை மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர் பயிற்சி நிறுவன வளாகத்தில் நட்டனர்.
அதன்பின், தேர்வு குழுவால் முதல் 3 பரிசுக்கான ஓவியங்களும், 10 ஆறுதல் பரிசுக்கான ஓவியங்களும் தேர்வு செய்யப்பட்டன.
மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மூர்த்தி, வேளாண் துறை இயக்குநர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வித்துறை செயலர் அருண் தேசாய் தலைமை தாங்கி, ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இதில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2ஆம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3ஆம் பரிசாக ரூ.2 ஆயிரம், ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது.
போட்டியில் முதல் பரிசு வென்ற லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவி இளவேனில் தில்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்.
சிறப்புப் பணி அலுவலர் ரங்கநாதன், சுற்றுச்சூழல் கல்வி பிரிவு ஒருங்கிணைப்பாளர் பூபதி மற்றும் விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர். மூத்த விஞ்ஞானி நன்றி கூறினார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post