Title of the document

காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை, 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கூடுதல் டிஜிபி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காவல் குற்ற ஆவணக் காப்பக கூடுதல் டிஜிபி சீமா அகர்வால் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, தீவிரவாதம், சிறுவர் சிறுமியர் மற்றும் சர்ச்சைக்குரிய முக்கிய வழக்குகள் தவிர, மற்ற அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) 24 மணி நேரத்துக்குள் காவல்துறை வலைதளத்தில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொலைதொடர்பு வசதி குறைவாக உள்ள காவல் நிலையங்களில் மட்டும் காவல் நிலைய வலைதளத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவேற்றம் செய்ய 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு காவல்துறை http://eservices.tnpolice.gov.in என்ற வலைதளத்தில் முதல் தகவல் அறிக்கையை பொதுமக்கள் பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கடந்த 14ஆம் தேதிக்குப் பின்னர் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த வலைதளத்தினுள் பொதுமக்கள் செல்ல, தங்களது செல்போன் நம்பரை பதிவு செய்தவுடன் செல்போனுக்கு குறுஞ்செய்தி வரும். ஒருமுறை கடவுச்சொல்லை (ஓடிபி) உள்ளீடு செய்தபின்னரே முதல் தகவல் அறிக்கையை பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ முடியும் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியின் பின்புலம்:

இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், ‘காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும், முதல் தகவல் அறிக்கை மிக முக்கிய பொதுஆவணம். ஆனால் அந்த முதல் தகவல் அறிக்கையை எளிதில் பெறமுடிவதில்லை. எனவே, பொதுமக்கள் எளிதில் பெறும்வகையில், முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்த 24 மணி நேரத்துக்குள் உரிய காவல்துறை இணையதளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோரைக் கொண்ட அமர்வு, முதல் தகவல் அறிக்கையை 24 மணி நேரத்துக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post