Title of the document
!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க, பறக்கும் படை உள்பட பல்வேறு அதிரடி ஏற்பாடுகள் செய்யப்படும். இது தவிர பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க,  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு பணிக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

பொதுவாக ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் தேர்வு பணியில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன்,  ‘மாஸ் காப்பியிங்’ எனப்படும் மாணவர்களை ஒட்டு மொத்தமாக காப்பி அடிக்க விடும் செயல் நடப்பதாக  நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உண்டு.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய பிளஸ் 2 தேர்வின்போது, ஈரோடு மாவட்டத்திற்கு நேர்மையான அதிகாரியான அப்போதைய இணை இயக்குநர் கருப்பசாமி ( தற்போது மெட்ரிக் பள்ளி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்)  கண்காணிப்பிற்கு அனுப்பப்பட்டார். ஈரோட்டில் தொழிலதிபர் சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமாக ஐடியல், ஆதர்ஸ் என்ற இரு பிரபலமான தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 14 ம் தேதி, பிளஸ் 2 வேதியியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது இணை இயக்குநர் கருப்பசாமிக்கு ஐடியல் பள்ளியில் 'மாஸ் காப்பியிங்' நடப்பதாக தகவல் வந்தது.

உடனே அந்த பள்ளிக்கு விரைந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இணை இயக்குநர் கருப்பசாமி அங்கு வரும் தகவல்,  பள்ளி நிர்வாகத்திற்கு வந்து விட்டது. ஐடியல் மெட்ரிக் பள்ளி 2 மாடிக்கட்டடங்களை கொண்டது. இரு மாடிகளிலும் உள்ள அறைகளில் பிளஸ் 2 தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில், உடனே மாணவர்கள் கையில் வைத்திருக்கும் பிட்டுக்களை தூக்கி எறியும்படி பள்ளி நிர்வாகம், தேர்வு பணி ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தியது. உடனே மாணவர்கள், தங்கள் வசம் வைத்திருந்த பிட்டுக்களை அவசர அவசரமாக ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தனர். பள்ளி வளாகத்திற்குள் சென்ற இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீதே அந்த பிட்டுகள் விழுந்தன. அந்த பிட்டுகளை பிரித்து பார்த்த கருப்பசாமி அதிர்ச்சி அடைந்தார். இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல், மற்றொரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் ஒட்டு மொத்தமாக பிட்டுகளை வைத்து வெளிப்படையாக தேர்வுகள் எழுதுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் சில மாணவர்களை கையும் களவுமாக பிடித்து, தேர்வு கண்காணிப்பாளரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதுபோல், ஈரோடு ஆதர்ஸ் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் இதேப்போன்று  'மாஸ் காப்பியிங்' நடப்பதை நேரில் கண்டறிந்த அவர், இது தொடர்பாக அரசு தேர்வுத்துறைக்கு தனியாக ரகசிய அறிக்கை அனுப்பி வைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார்.

அதோடு பிளஸ் 2 தேர்வும் முடிந்தது. அதற்கு பிறகுதான் மோசடியின் உச்சகட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழகம் முழுவதும், 100க்கு அதிகமான மையங்களில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நடந்தது. அப்போது திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள ஒரு பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவன் வேதியியல், கணக்கு, உயிரியல், ஆகிய 3 பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் வாங்கியிருப்பதும், ஆனால் அந்த விடைத்தாளில் 3 , 5 மற்றும் 10 மதிப்பெண்களுக்கான விடைகள் வேறு கையெழுத்தில் எழுதப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதே போல் 5 மாணவர்களின் விடைத்தாள்களிலும் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான முக்கியமான பாடங்களில் மட்டும் 200க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியிருப்பதும், அவர்களின் விடைத்தாளில் கையெழுத்து மட்டும் ஒரே மாதிரியாக இருப்பதையும் கண்டு,  விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவியிடம் முறையிடப்பட்டது. உடனே,  'அந்த 5 மாணவர்கள் எந்த பள்ளி மாணவர்கள்' என்று விசாரித்தபோது, அது மாஸ் காப்பிங் சர்ச்சையில் சிக்கிய ஐடியல், ஆதர்ஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த 5 மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டும் தனியாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டு,  தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியதில், 5 மாணவர்களின் விடைத்தாள்களில் விடை எழுதியது ஒருவரின் கையெழுத்துதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு நடந்த போது,  பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில்,  ஒரு ஆசிரியர் அந்த பாடங்களுக்கான விடைகளை எழுதி,  பிறகு அந்த விடைத்தாள்களை மாணவர்களின் விடைத்தாள்களோடு இணைத்தது, விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதில், அந்த விடைத்தாளில் இருந்த கையெழுத்து தங்களது இல்லை, என்பதை ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக,  முதன்மை கல்வி அலுவலர் அய்யணனிடம் அறிக்கையை கோரி பெற்றது தேர்வுத்துறை.

மேலும் இந்த விவகாரம்  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 'தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் மே மாதம் நடக்க இருப்பதால், அப்போது அந்த பிரச்னை வெளியே வந்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்' என்று முடிவு செய்து,  உயர் அதிகாரிகள் அந்த விவகாரத்தை மூடி மறைத்தனர். ஆனால் இப்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, சட்டசபை தேர்தலும் முடிந்துவிட்ட நிலையில், ஐடியல் மற்றும் ஆதர்ஸ் ஆகிய  தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தேர்வுப்பணியில் ஈடுபட்ட ஈரோடு மாத்தூர் அரசு மாடல் முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நசீர், டி.ஜி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் சகாயராஜ், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உயிரியல் முதுநிலை ஆசிரியர் முருகன், இயற்பியல் ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர் மாணவர்கள் பிட் அடிக்க உதவியதாகவும், குறிப்பிட்ட 5 மாணவர்களுக்கு மட்டும் விடைத்தாள்களில் ஒரு ஆசிரியர் விடைகளை எழுதி மோசடி செய்திருப்பதாகவும் கூறி சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அவர்களை சஸ்பெண்ட் செய்தார்.

* மேலும் பலர் மாட்டுவார்கள்.

பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுப்பணிகளில் எந்தெந்த பள்ளிகளில் எந்த ஆசிரியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடச்செய்வது என்பதை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அந்த அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 4 ஆசிரியர்களும் கடந்த 4 ஆண்டுகளாக ஆதர்ஸ் மற்றும் ஐடியல் பள்ளிகளில் மாறி மாறி தேர்வு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த மோசடியில், முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளது.

* ஆசிரியர்கள் மற்றும் வக்கீல்களின் பிள்ளைகளா?

குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை ஏற்கனவே நிறுத்தி வைத்து விட்டது. குறிப்பிட்ட அந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்றும், வக்கீல்களின் பிள்ளைகள் என்றும் தகவல்கள் வருகின்றன.

* சென்டம் பெற்ற மாணவர்கள் மீது சந்தேகம்:

ஈரோட்டில் குறிப்பிட்ட அந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் கணிசமானோர் இயற்பியல், வேதியியல் உள்பட முக்கியமான பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதுபோல் அந்தப் பள்ளியை சேர்ந்த மாணவர் விக்னேஷ் என்பவர் மாநில அளவில் ரேங்க் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கட் ஆப்பில் முதலிடம் பெற்று, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இதுபோலவே அந்தப் பள்ளியை சேர்ந்த கணிசமான மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் மெரிட் மூலம் தேர்வாகியுள்ளனர். பிளஸ் 2 தேர்வு மோசடி பிரச்னையால் குறிப்பிட்ட அந்த பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சென்டம்கள் மீது இப்போது சந்தேகக்கறை படியத்தொடங்கியுள்ளது.

* தேர்வு மைய அங்கீகாரம் ரத்து:

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்த்ரா தேவியை தொடர்பு கொண்டு கேட்டபோது, " முதல் கட்ட விசாரணையில் காப்பி அடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடக்கும் விசாரணையில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இது போன்ற மோசடிகள் நடந்து வருவது குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

வழக்கமாக 150 மாணவர்களுக்கு மேல் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் மாணவர்களின் பள்ளிகளுக்கு தேர்வு மையம் அங்கீகாரம் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களில் எந்தப் பள்ளியில் தேர்வு எழுதினார்கள் என்று தேர்வு மையப்பள்ளியின் பெயர் குறிப்பிடப்படும். தற்போது முதல் கட்டமாக பிளஸ் 2 தேர்வில் மோசடியில் ஈடுபட்ட அந்த இரு பள்ளிகளின் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்விற்கான தேர்வு மையம் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்." என்றார்.

பள்ளி நிர்வாகம் சொல்வது என்ன?

இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள ஐடியல் மற்றும் ஆதர்ஸ் மெட்ரிக் பள்ளிகளின் தாளாளரை தொடர்புகொண்டு, அவர்களது தரப்பு விளக்கத்தை பெற முயற்சித்தோம். ஆனால் அவரது செல்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாக அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பேசியபோது, இதுகுறித்து தங்களால் எதுவும் கூற முடியாது என்றும், எதுவானாலும் பள்ளி தாளாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லி விட்டனர்.

மேற்கூறிய பள்ளிகள் தரப்பில் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க முன்வந்தால், அதனையும் பிரசுரிக்க தயாராக உள்ளோம். 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post